Wednesday 26 June 2013

பெண்கள் வீட்டில் தொழுவதே சிறந்தது



பெண்கள் வீட்டில் தொழுவதே சிறந்தது

ஐவேளைத் தொழுகைக்களுக்கு பெண்கள் பள்ளிவாசலுக்கு சென்று நிறைவேற்ற வேண்டும் என்றும், அது தான் நபி வழி என்றும் வஹ்ஹாபிகள் கூறிக்கொண்டு மக்களை வழிகெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் அவர்களின் கூற்றிற்கு பின்வரும் ஹதீஸ்களை ஆதாரமாக கூறுகின்றனர்.

உங்களில் எவரேனும் ஒருவரின் மனைவி (பள்ளிக்குச் செல்ல) அனுமதி கேட்டால் அப்பெண்ணை தடுக்கவேண்டாம்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

(அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு உமர் (ரளி), நூல் : புகாரி 875)

அல்லாஹ்வின் அடிமைப் பெண்களை அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை விட்டும் தடுக்காதீர்கள்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரளி), நூல் : புகாரி 900)

      ஆனால் உண்மை நிலை என்னவெனில் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் எல்லா பெண்களும், எல்லா தொழுகைகளுக்கும் பள்ளிவாசலுக்கு செல்லவில்லை. மாறாக ஐவேளைத் தொழுகைகளில் இருளில் தொழப்படுகிற மஃரிப், இஷா, ஃபஜ்ர் ஆகிய தொழுகைகளை மட்டும் தான் ஸஹாபிப் பெண்கள் பள்ளியில் தொழுதுள்ளார்கள். அதுவும் சில பெண்கள் தான் தொழுதுள்ளார்கள். மேலும் ஆண்கள் பள்ளிவாசலில் ஜமாஅத்துடன் தொழுவதை வலியுறுத்தப்பட்டதை போல பெண்கள் பள்ளிவாசலில் ஜமாஅத்துடன் தொழுவதை வலியுறுத்தப்படவில்லை. மாறாக பெண்கள் வீட்டில் தொழுவதைத் தான் நபி (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள். பெண்கள் பள்ளியில் தொழுவதை விட வீட்டில் தொழுவதுதான் சிறந்தது என்றும் கூறியுள்ளார்கள்.

ஆதாரம் 1

உங்கள் பெண்கள் இரவில் பள்ளிவாசலுக்குச் செல்ல உங்களிடம் அனுமதி கேட்டால் அவர்களுக்கு அனுமதி கொடுங்கள்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரளி), நூல் : புகாரி 865)

ஆதாரம் 2

இரவில் பள்ளிவாசல்களுக்குச் செல்ல பெண்களுக்கு அனுமதி கொடுங்கள்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரளி), நூல் : புகாரி 899)

மேற்படி இரு ஹதீஸ்களும் உணர்த்துவது என்ன?

* நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பெண்கள் இரவில் தான் பள்ளிவாசலுக்கு சென்றுள்ளார்கள்.

* ஆண்கள் பள்ளிவாசலில் ஜமாஅத்துடன் தொழுவதை வலியுறுத்தப்பட்டதை போல பெண்கள் பள்ளிவாசலில் ஜமாஅத்துடன் தொழுவதை வலியுறுத்தப்படவில்லை. அவ்வாறு வலியுறுத்தப்பட்டிருந்தால் அவர்கள் பள்ளிக்குச் செல்வதற்கு கணவனிடம் அனுமதி கேட்க வேண்டிய அவசியமில்லை.

* நபி (ஸல்) அவர்களின் காலத்திலேயே பெண்கள் இரவில் பள்ளிக்குச் செல்ல வேண்டுமென்றால் அவர்களின் கணவனிடம் அனுமதி கேட்டுத்தான் செல்ல வேண்டும்.

எனவே ஐவேளைத் தொழுகைகளுக்கும் பெண்கள் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்பதற்கு ஒரு ஹதீஸ் கூட ஆதாரமாக இல்லை.

இது நாள் வரை இஸ்லாமியப் பெண்கள் அவர்களுடைய சிறந்த பள்ளிவாசலான அவர்களது இல்லத்தில் வைத்து தொழுது கொண்டிருந்தார்கள். எந்த ஒரு பெண்ணும் தன் கணவனிடம் பள்ளிக்குச் சென்று தொழுவதற்கு அனுமதி கேட்கவும் இல்லை.  ஆனால் அப்பெண்களை பள்ளிக்குச் சென்று தொழும்படி வஹ்ஹாபிகள் தூண்டிவிட்டு குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலை அப்பட்டமாக மீறிக் கொண்டிருக்கிறார்கள். நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலோ பெண்களை வீட்டில் தொழுவதை ஆர்வமூட்டுவதாகும். ஆனால் இக்குழப்பவாதிகளோ நபி (ஸல்) அவர்களின் இவ்வழகிய சுன்னத்தை மீறி பெண்களை பள்ளிக்குச் செல்ல ஆர்வமூட்டிக் கொண்டிருகிறார்கள்.  

ஆதாரம் 3

நிச்சயமாக நான் ஒரு ஆணை இம்மக்களுக்கு தொழவைக்கும்படி கட்டளையிட்டு, பின்பு தொழுகைக்கு வராமல் (வீட்டில் இருக்கின்ற) ஆண்களிடம் சென்று விறகுக்கட்டுகளின் மூலம் அவர்கள் மீது நெருப்பிட்டு அவர்களின் வீட்டையும் நெருப்பிட்டு கொழுத்த நாடுகிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’.  (அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரளி), நூல் : முஸ்லிம் 251, புகாரி 644)

ஆதாரம் 4

வீடுகளில் பெண்களும், குழந்தைகளும் இல்லையென்றால் இஷாத் தொழுகையை நான் நிறைவேற்றிவிட்டு, வீட்டில் (இருக்கும்) ஆண்களை நெருப்பினால் எரித்துவிடும்படி எனது வாலிபர்களிடம் நான் உத்தரவிட்டு இருப்பேன்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரளி), நூல் : அஹ்மது 8796)  

மேற்படி இரு ஹதீஸ்களும் உணர்த்துவது என்ன?

* ஆண்கள் பள்ளியில் ஜமாஅத்துடன் தொழுவது மிகவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவே தான் அவர்கள் பள்ளிக்கு வராமல் வீட்டில் இருப்பது நபி (ஸல்) அவர்களுக்கு கோபத்தை மூட்டியுள்ளது.

* பள்ளிக்கு வராமல் வீட்டில் இருக்கும் ஆண்களை வீட்டோடு நெருப்பிட்டு கொழுத்த வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறும் அளவுக்கு நபி (ஸல்) அவர்களின் கோபத்தை அது அதிகரித்துள்ளது.

* தொழுகை நடைபெறும் சமயங்களில் வீடுகளில் பெண்களும், குழந்தைகளும் இருப்பத்தினால் தான் நபி (ஸல்) அந்த ஆண்களை வீட்டோடு எரிக்காமல் விட்டுள்ளார்கள்.

* பெண்கள் பள்ளிக்கு வந்துதான் தொழ வேண்டும் என்பது வலியுறுத்தப்படாத விஷயமாகும். எனவே தான் அவர்கள் வீட்டில் இருப்பதால் ஆண்களை நெருப்பால் எரிக்காமல் விட்டேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

ஆதாரம் 5

உங்கள் பெண்களை பள்ளிவாசல்களை விட்டும் தடுக்காதீர்கள். எனினும் அவர்களின் வீடே அவர்களுக்கு சிறந்ததாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரளி), நூல் : அபூதாவூத் 567, அஸ்ஸுனனுல் குப்ரா லில் பைஹகீ 5359 )

      நபி (ஸல்) அவர்கள் தமது காலத்தில் இரவு நேரங்களில் பெண்களுக்கு பள்ளிக்குச் செல்ல அனுமதி வழங்கியிருந்தாலும் அப்பெண்கள் பள்ளியில் தொழுவதை விட வீட்டில் தொழுவதே சிறந்தது என்று கூறி பெண்கள் வீட்டில் தொழுவதை ஆர்வமூட்டியுள்ளார்கள்.

ஆதாரம் 6

பெண்களின் பள்ளிவாசல்களில் சிறந்தது அவர்களுடைய வீடுகளின் ஆழமான (ஓரப்) பகுதியாகும்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : உம்மு ஸலமா (ரளி), நூல் : அஸ்ஸுனனுல் குப்ரா லில் பைஹகீ 5360

ஆதாரம் 7

ஒரு பெண் அவளுடைய (பொது) அறையில் தொழுவதை விட அவளுடைய (தனி) வீட்டில் தொழுவது சிறந்ததாகும். மேலும் அவளுடைய (தனி) வீட்டில் தொழுவதை விட அவளுடைய (தனி) அறையில் தொழுவது சிறந்ததாகும்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரளி), நூல் : அஸ்ஸுனனுல் குப்ரா லில் பைஹகீ 5361

      மேற்படி இரு ஹதீஸ்களிலும் பெண்களின் சிறந்த பள்ளிவாசல் அவர்களின் வீடு என்றும், அதிலும் அவ்வீட்டிலுள்ள அவளின் தனி அறை என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளது மிக கவனிக்கத்தக்க விஷயமாகும். ஆனால் இந்த வஹ்ஹாபிகள் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலை அப்பட்டமாக மீறிக் கொண்டிருக்கிறார்கள். நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலோ பெண்களை வீட்டில் தொழுவதை ஆர்வமூட்டுவதாகும். ஆனால் இக்குழப்பவாதிகளோ நபி (ஸல்) அவர்களின் இவ்வழகிய சுன்னத்தை மீறி பெண்களை பள்ளிக்குச் செல்ல ஆர்வமூட்டிக் கொண்டிருகிறார்கள். 

ஆதாரம் 8

அபூஹுமைத் அஸ்ஸாயிதீ (ரளி) அவர்களின் மனைவி உம்மு ஹுமைத் (ரளி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து; அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நிச்சயமாக நான் உங்களுடன் தொழுவதற்கு பிரியப்படுகிறேன் என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள்; நிச்சயமாக நீங்கள் என்னுடன் தொழுவதற்கு பிரியப்படுகிறீர்கள் என்பதை நான் அறிந்துள்ளேன். எனினும் என்னுடைய பள்ளியில் நீங்கள் தொழுவதை விட உங்களுடைய சமுதாயத்தின் பள்ளியில் நீங்கள் தொழுவது உங்களுக்கு சிறந்ததாகும். மேலும் உங்களுடைய சமுதாயத்தின் பள்ளியில் நீங்கள் தொழுவதை விட உங்களுடைய (பொது) வீட்டில் நீங்கள் தொழுவது உங்களுக்கு சிறந்ததாகும். மேலும் உங்களுடைய (பொது) வீட்டில் நீங்கள் தொழுவதை விட உங்களுடைய அறையில் நீங்கள் தொழுவது சிறந்ததாகும். உங்களுடைய அறையில் நீங்கள் தொழுவதை விட உங்களுடைய (தனி) வீட்டில் நீங்கள் தொழுவது உங்களுக்கு சிறந்ததாகும் என்று கூறினார்கள். எனவே உம்மு ஹுமைத் (ரளி) அவர்கள் (அவரது வீட்டில் தொழுவதற்கென தனி இடம் கட்டுவதற்கு) உத்தரவிட்டார்கள். எனவே அவரது வீட்டின் மிக ஓரப்பகுதியில், இன்னும் மிக இருளான பகுதியில் அவர்களுக்கென்று தொழுமிடம் கட்டப்பட்டது. அல்லாஹ்வை சந்திக்கும் வரை அப்பெண்மணி அதில் தான் தொழக்கூடியவர்களாக இருந்தார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு ஸுவைத் (ரளி), நூல் : அஹ்மது 27090, இப்னு ஹுசைமா 1689, இப்னு ஹிப்பான் 2217,

மேலும் இதே கருத்தில் அல்முஃஜமுல் கபீர் லித் தப்ரானி 356 மற்றும் இப்னு அபீஷைபா 7620 மற்றும் அஸ்ஸுனனுல் குப்ரா லில் பைஹகீ 5371 ஆகிய நூல்களிலும் ஹதீஸ்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேற்படி ஹதீஸ் நமக்கு உணர்த்துவது என்ன?

* நபி (ஸல்) அவர்களின் பள்ளியான மஸ்ஜிதுந் நபவியில் தொழுவது மற்ற பள்ளியில் தொழப்படுகிற 1000 தொழுகைகளை விட மிக சிறந்தது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருந்தும் உம்மு ஹுமைத் (ரளி) என்ற பெண்ணிடம் நபி (ஸல்) அவர்கள்; நீங்கள் என் பள்ளியில் தொழுவதை விட உங்கள் வீட்டில் தொழுவது தான் சிறந்தது என்று கூறியுள்ளார்கள் என்றால் பெண்கள் வீட்டில் தொழுவதை மிக மிக நபி (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள் மட்டுமல்ல. அதைத் தான் பிரியப்பட்டுள்ளார்கள்.

* நீங்கள் என் பள்ளியில் தொழுவதை விட உங்களுடைய வீட்டில் தொழுவது சிறந்தது என்று நபி (ஸல்) அவர்கள் சுருக்கமாக கூறாமல் என் பள்ளியில் தொழுவதை விட உமது சமுதாயத்தின் பள்ளியில் தொழுவது சிறந்தது, உமது சமுதாயப்பள்ளியில் தொழுவதை விட உங்களுடைய பொது வீட்டில் தொழுவது சிறந்தது, அதை விட அறையில் தொழுவது சிறந்தது, அதை விட உங்களுடைய தனி வீட்டில் தொழுவது சிறந்தது என்று கூறிய காரணம் என்னவெனில் பள்ளிவாசலில் தொழுவதை விட வீட்டில் தொழுவது தான் மிக மிக சிறந்தது என்பதை தெள்ளத் தெளிவாக உணர்த்துவதற்காகத்தான் அவ்வாறு விரிவாக கூறியுள்ளார்கள்.

* நபி (ஸல்) அவர்களின் காலம் வஹீ இறங்கும் காலமாகும். மேலும் ஸஹாபாக்கள் எல்லோரும் தூய்மையானவர்கள், இறைப்பொருத்தத்தைப் பெற்றவர்கள் என்பது தெளிவான விஷயமாகும். மேலும் நபி (ஸல்) அவர்களின் காலமும், ஸஹாபாக்களின் காலமும், தாபியீன்களின் காலமும், தபவுத் தாபியீன்களின் காலமும் மிக சிறந்த காலம். அதற்கடுத்துள்ள காலத்திலிருந்து தான் பொய், குழப்பம், தீமைகள் ஆரம்பிக்கும் என்று நபி (ஸல்) அவர்களே கூறியுள்ளார்கள். மிக சிறந்த காலமான நபி (ஸல்) அவர்களின் காலத்திலேயே பெண்கள் பள்ளியில் தொழுவதை விட அவர்களின் வீட்டில் தொழுவது தான் சிறந்தது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என்றால் பொய்யும், குழப்பமும், ஆண்களிடத்திலும், பெண்களிடத்திலும் தவறுகள் அதிகரித்துவிட்ட இந்த காலத்தில் பெண்கள் பள்ளிக்கு வருவது ஆகுமானது என்று கூறமுடியுமா? எனவே தான் ஆயிஷா (ரளி) அவர்கள் மற்றும் பெரும் பெரும் ஸஹாபாக்கள் பின் வருமாறு கூறினார்கள்.

 

 

ஆயிஷா (ரளி) அவர்களின் மார்க்கத் தீர்ப்பு   

பெண்கள் ஏற்படுத்திய புதுமையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்டிருந்தால் பனூ இஸ்ராயீலின் பெண்கள் பள்ளிக்கு வருவதை விட்டும் தடுக்கப்பட்டதை போன்று நபி (ஸல்) அவர்களும் பெண்களை பள்ளிக்கு வருவதை விட்டும் தடுத்திருப்பார்கள் என்று ஆயிஷா (ரளி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அம்ரா (ரஹ்), நூல் : புகாரி 822

இப்னு அப்பாஸ் (ரளி) அவர்களின் மார்க்கத் தீர்ப்பு

ஒரு பெண்மணி ஜுமுஆ நாளில் பள்ளியில் தொழுவதைப்பற்றி இப்னு அப்பாஸ் (ரளி) அவர்களிடம் வினவினார்கள். நீங்கள் உங்களுடைய சமுதாயப் பள்ளியில் தொழுவதை விட உங்களுடைய (பொது) அறையில் தொழுவது மிக சிறந்தது. உங்களுடைய (பொது) அறையில் நீங்கள் தொழுவதை விட உங்களுடைய (தனி) வீட்டில் நீங்கள் தொழுவது மிக சிறந்தது. உங்களுடைய (தனி) வீட்டில் நீங்கள் தொழுவதை விட உங்களுடைய (தனி) அறையில் தொழுவது மிக சிறந்தது என்று இப்னு அப்பாஸ் (ரளி) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பாளர் : ஸயீதுப்னு ஜுபைர் (ரஹ்), நூல் : முஸன்னஃபு இப்னி அபீஷைபா 7615

இப்னு மஸ்வூத் (ரளி) அவர்களின் மார்க்கத் தீர்ப்பு

1 – எந்த ஒரு பெண்ணும் அவளுடைய வீட்டில் அவள் தொழுகிற தொழுகையை விட மிக சிறந்த எந்த தொழுகையையும் அவள் தொழுவதில்லை. அவள் மஸ்ஜிதுல் ஹராமில் தொழுகிற தொழுகையைத் தவிர ………………. என்று இப்னு மஸ்வூத் (ரளி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூ அம்ர் அஷ்ஷைபானி (ரஹ்), நூல் : முஸன்னஃபு இப்னி அபீஷைபா 7614

2 – ஒவ்வொரு பெண்ணும் மறைக்கப்பட வேண்டியவளாகும். அவள் தனது வீட்டின் மிக இருளான (ஆழமான) பகுதியில் இருந்தால் அவளுடைய இறைவனுக்கு மிக நெருக்கமானவளாக ஆகிவிடுவாள். அவள் (இல்லத்தை விட்டு) வெளியேறினால் ஷைத்தான் அவளை (அந்நியருக்கு) அழங்காரமாக காட்டுவான் என்று இப்னு மஸ்வூத் (ரளி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபுல் அஹ்வஸ் (ரஹ்), நூல் : முஸன்னஃபு இப்னி அபீஷைபா 7616

3 – எந்த ஒரு பெண்ணும் அவளுடைய வீட்டில் தொழுவதை விட அல்லாஹ்வுக்கு மிக பிரியமான தொழுகையை தொழுவதில்லை. ஹஜ் மற்றும் உம்ராவில் தவிர …………….. என்று மிகக் கடுமையாக சத்தியமிட்டு இந்த வீட்டின் சொந்தக்காரரான இப்னு மஸ்வூத் (ரளி) அவர்கள் கூறியதை நான் கேட்டேன் என்று அபூ அம்ர் அஷ்ஷைபானி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.    நூல் : முஸன்னஃபு இப்னி அபீஷைபா 7619

கடமையான ஐவேளைத் தொழுகைகளுக்கே பெண்கள் பள்ளிக்கு செல்வதை விட வீட்டில் தொழுவது தான் மிக மிக சிறந்தது என்று தெள்ளத் தெளிவாக நிரூபணமானதால் தராவீஹ் போன்ற சுன்னத்தான, உபரியான வணக்கங்களுக்கு பெண்கள் பள்ளிக்கு வருவது அறவே கூடாது என்பதை நாம் இலகுவாக புரியமுடியும்.

இது வரை ஸஹாபாக்களின் தீர்ப்பை பார்த்தோம். இப்பொழுது இமாம்களின் தீர்ப்பை பார்ப்போம்.

 

ஹனஃபீ மத்ஹப் அறிஞர்களின் மார்க்கத் தீர்ப்பு

இமாம் ஸர்கஸீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் : இரு பெருநாளில் (ஆண்கள்) தொழுமிடத்திற்கு பெண்கள் வருவது சரியில்லை. (நபி (ஸல்) அவர்களின் காலத்தில்) பெண்களுக்கு அதற்கு அனுமதியளிக்கப்பட்டிருந்தது. எனினும் இன்றைய காலத்தில் வாலிபப் பெண்கள் பள்ளிக்கு வருவதை நான் வெறுக்கின்றேன். நிச்சயமாக வாலிபப் பெண்கள் வீட்டில் இருக்க வேண்டும் ஏவப்பட்டுள்ளார்கள். மேலும் வீட்டை விட்டு வெளியேறுவதை தடுக்கப்பட்டுள்ளார்கள். ஏனெனில் வீட்டை விட்டு வெளியேறுவதில் குழப்பங்கள் (தீமைகள்) இருக்கின்றன. வயது முதிர்ந்த கிழவிகளுக்கு மஃரிப், இஷா, ஃபஜ்ர் ஆகிய தொழுகைகளுக்கும், இரு பெருநாள் தொழுகைக்கும் ஜமாஅத்துடன் தொழ பள்ளிக்கு செல்வதற்கு அனுமதியளிக்கப்பட வேண்டும். மேலும் ளுஹ்ர், அஸ்ர், ஜுமுஆ தொழுகைகளுக்கு ஜமாஅத்துடன் தொழ பள்ளிக்கு செல்வதற்கு அவர்களுக்கு அனுமதி கொடுக்கப்படக்கூடாது. இது தான் அபூஹனீஃபா (ரஹ்) அவர்களின் கூற்றாகும்.

இமாம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் :  (வயது முதிர்ந்த கிழவிகளுக்கு மஃரிப், இஷா, ஃபஜ்ர் ஆகிய தொழுகைகளுக்கு பள்ளிக்கு செல்வதற்கு அனுமதியளிக்கப்பட வேண்டும் என்பதற்குரிய காரணம் என்னவெனில்) அந்த இரவுடைய தொழுகைகளில் கிழவிகள் மறைவாகவும், இரவின் இருளிலும் தான் பள்ளிக்குச் செல்வார்கள். அக்கிழவிகளுக்கும், அந்நிய ஆண்கள் அவர்களை பார்ப்பதற்கும் மத்தியில் இருளும், மறைவும் திறையாக இருக்கின்றன. ஆனால் ஊர்களில் நிறைவேற்றப்படுகிற பகல் தொழுகைகளும், ஜுமுஆ தொழுகையும் அவ்வாறல்ல. (பகல் நேரங்களில் வெளியில்) ஆண்களின் கூட்டம் அதிகமாக இருக்கின்ற காரணத்தினால் ஆண்கள் அப்பெண்களை இடித்து விடலாம். இதில் மிகப்பெரும் குழப்பம் (தீமை) இருக்கின்றது. மேலும் வயது முதிர்ந்த கிழவிகளை வாலிபர்கள் ஆசை கொள்ளாவிட்டாலும் அக்கிழவிகளை போன்ற வயதுடைய கிழவர்கள் அவர்களை ஆசை கொள்ளலாம். சில சமயம் தீய வாலிபர்களின் கடும் காமம் கிழவிகள் மீது கூட ஆசையை ஏற்படுத்திவிடலாம். மேலும் அக்கிழவிகளை இடிப்பதற்கு அந்த வாலிபர்கள் நாடலாம்.

(நூல் : அல்மப்ஸூத் லிஸ் ஸர்கஸீ, பாகம் 2, பக்கம் 41, பதாயிஉஸ் ஸனாயிஃ, பாகம் 1, பக்கம் 275, அல்முஹீத்துல் புர்ஹானி ஃபில் ஃபிக்ஹின் நுஃமானி, பாகம் 2, பக்கம் 101, 102, 103, ஃபத்ஹுல் கதீர், பாகம் 2, பக்கம் 214, 215)

      இருளில் நிறைவேற்றப்படுகிற மஃரிப், இஷா, ஃபஜ்ர் ஆகிய தொழுகைகளில் குழப்பங்கள் (தீமைகள்) ஏற்படும் வாய்ப்பு மிக குறைவு என்ற காரணத்தினால் அத்தொழுகைகளிக்கு கிழவிகள் பள்ளிக்குச் செல்ல அனுமதியளிக்கப்பட வேண்டும் என்று இமாம் அபூ ஹீஃபா (ரஹ்) அவர்கள் கூறினார்கள். அபூ ஹனீஃபா (ரஹ்) அவர்களின் காலம் நபி (ஸல்) அவர்களால் போற்றப்பட்ட சிறப்புக்குரிய காலமாகும். அக்காலத்தில் அத்தொழுகை உடைய நேரங்களில் குழப்பங்கள் இல்லாமல் இருந்தன. ஆனால் இன்றைய காலம் பொய், தீமைகள், நிறைந்த காலமாகும். மேலும் ஆண்களிடத்திலும், பெண்களிடத்திலும் தீமைகள் அதிகரித்துவிட்ட காலமாகும். எனவே இன்றைய காலத்தில் இருளில் நிறைவேற்றப்படுகிற மஃரிப், இஷா, ஃபஜ்ர் ஆகிய தொழுகைகளுக்கு கிழவிகளுக்கு கூட அனுமதி வழங்கப்பட முடியாத காலமாக இருக்கிறது. எனவே தான் பிற்காலத்து ஹனஃபீ மத்ஹப் அறிஞர்கள் கிழவிகளுக்கு அத்தொழுகைகளுக்கும் அனுமதி வழங்கப்படக்கூடாது என்று கூறியுள்ளார்கள்.

எல்லா நேரங்களிலும் குழப்பங்களும் (தீமைகளும்) மிகைத்துவிட்ட காரணத்தினால் எல்லா தொழுகைகளிலும் வாலிபப் பெண்களுக்கும், வயது முதிர்ந்த கிழவிகளுக்கும் பள்ளிக்குச் செல்ல அனுமதி வழங்கப்படக்கூடாது என்று பிந்தைய ஹனஃபீ அறிஞர்கள் கூறியுள்ளார்கள் (நூல் : ஃபத்ஹுல் கதீர், பாகம் 2, பக்கம் 216)

பள்ளியில் நடைபெறும் ஜமாஅத் தொழுகை, ஜுமுஆ மற்றும் பெருநாள் தொழுகை, அங்கு நடைபெறும் உபதேசம் ஆகியவைகளில்  பெண்கள் கலந்து கொள்வது மக்ரூஹாகும். (விரும்பத்தகாத செயலாகும்.) மேலும் இரவு நேரத்திலு கிழவிகள் பள்ளிக்குச் செல்வது மக்ரூஹாகும். (விரும்பத்தகாத செயலாகும்.) காலம் கெட்டுப்போய் இருக்கிற காரணத்தினால் இதுதான் ஹனஃபீ மத்ஹபின் மார்க்கத்தீர்ப்பாகும்’.

(நூல் : ரத்துல் முஹ்தார், பாகம் 4, பக்கம் 261)

 

 

ஷாஃபிஈ மத்ஹப் அறிஞர்களின் மார்க்கத் தீர்ப்பு

ஒரு பெண் பள்ளிவாசலில் ஆணுடன் ஜமாஅத் தொழுகையில் கலந்து கொள்ள நாடினால் அப்பெண் வாலிபப்பெண்ணாகவோ அல்லது ஆசைகொள்ளப்படுகிற வயதுமுதிர்ந்த பெண்ணாகவோ இருந்தால் பள்ளியில் ஜமாஅத் தொழுகையில் கலந்து கொள்வது அவளுக்கு மக்ரூஹாகும். ஏனெனில் அதன் மூலம் குழப்பம் (தீமை) ஏற்படுவதை அஞ்சப்படுகிறது. மேலும் அப்பெண் ஆசை கொள்ளப்படாத வயதுமுதிர்ந்த பெண்ணாக இருந்தால் பள்ளியில் ஜமாஅத் தொழுகையில் கலந்து கொள்வது அவளுக்கு மக்ரூஹாக ஆகாது.

(நூல் : அல்பயான் ஃபீ மத்ஹபில் இமாம் ஷாஃபிஈ, பாகம் 2, பக்கம் 366, அல்மஜ்மூஉ, பாகம் 4, பக்கம் 197, 198)

ஒரு பெண் ஆசை கொள்ளப்படாத வயது முதிர்ந்த கிழவியாக இருந்தால், மேலும் அவள் வீட்டை விட்டு வெளியேறுவதினால் அவள் மீது குழப்பத்தை (தீமையை) அஞ்சப்படாது என்றிருக்குமேயானால் இத்தகைய பெண் தன் கணவனிடம் தொழுகைக்காக பள்ளிக்குச் செல்ல அனுமதி கேட்டால் அவளுக்கு கணவன் அனுமதி வழங்குவது முஸ்தஹப்பாகும். (விரும்பத்தக்கச் செயலாகும்.) மேலும் கணவன் அவளை தடுத்தால் அது அவன் மீது ஹராமாகாது. இதுதான் (ஷாஃபிய்யாக்களாகிய) நம்முடைய மத்ஹபாகும். இதைத் தான் ஏனைய ஷாஃபிஈ மத்ஹப் அறிஞர்கள் கூறியுள்ளார்கள் என்று இமாம் பைஹகீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.  (நூல் : அல்மஜ்மூஉ, பாகம் 4, பக்கம் 199)

ஆண்களுடைய ஜமாஅத் தொழுகையில் கலந்துகொள்வதற்காக பள்ளிக்கு வருவது வாலிபப் பெண்களுக்கு மக்ரூஹாகும். ஏனெனில் குழப்பத்தை (தீமையை) அஞ்சப்படுகிறது. கிழவிகளுக்கு மக்ரூஹ் இல்லை’.

(நூல் : ஹாஷியத்தா கல்யூபி உமைரா லில் மஹல்லி, பாகம் 1, பக்கம் 255)

‘(வாலிபத்) தோற்றமுடைய வயது முதிர்ந்த பெண்களுக்கு ஆண்களுடன் பள்ளிவாசலில் கலந்து கொள்வது மக்ரூஹாகும். ஏனெனில் ஆயிஷா (ரளி) அவர்கள் பின்வருமாறு கூறிய செய்தி புகாரி, முஸ்லிமில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்கள் ஏற்படுத்திய புதுமையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பார்த்திருந்தால் பனூ இஸ்ராயீலின் பெண்கள் பள்ளிவாசலை விட்டும் தடுக்கப்பட்டதை போல இப்பெண்களையும் நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலை விட்டு தடுத்திருப்பார்கள்.  மேலும் பெண்கள் பள்ளிக்கு வருவதால் குழப்பம் (தீமை) ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது.     (நூல் : இஆனத்துத் தாலிபீன், பாகம் 2, பக்கம் 8)

 

No comments:

Post a Comment